பயிற்சிப்புத்தகத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட வினாத்தாள்! எழுந்தது சர்ச்சை!

உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு கடந்த பெப்ரவரி 27ம் திகதி நடத்தப்பட்ட பரீட்சையின் போது பொது உளச்சார்பு வினாத்தாளில் மோசடிகள் இடம்பெற்று, தமக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பரீட்சார்த்திகள் குழுவினர் ஆளுநரிடம் முறையீடு செய்துள்ளனர்.

திருகோணமலையில் வைத்து இது தொடர்பான மகஜரை பரீட்சார்த்திகள் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்திடம் கையளித்துள்ளனர்.

இதன் போது, தொடுக்கப்பட்ட கேள்விகளுள் ஒரு தனிப்பட்ட நபரின் பயிற்சிப் புத்தகத்திலிருந்து மாத்திரம் சுமார் 20 கேள்விகள் மாற்றங்கள் ஏதுமின்றி உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், இது அநீதியானதும் எதிர்காலத்தில் ஒரு பிழையான வழிகாட்டலை முன்வைக்கும் செயற்பாடாகவும் அமைவதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.

ஒரு அரச பரீட்சையை தனிநபரது வியாபார ரீதியான வழிகாட்டல் புத்தகங்களே தீர்மானிக்கும் மாயை தோற்றம் பெறுவதை, ஏனையவர்களது வாய்ப்பினை மழுங்கடிக்கச் செய்யும் செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், கடந்த காலங்களிலும் இது போன்றதொரு துர்ப்பாக்கிய நிலையேற்பட்ட போது, பரீட்சை இரத்துச் செய்யப்பட்டு மீளவும் நடத்தப்பட்ட வரலாற்றை அவர்கள் இங்கு சுட்டிக் காட்டியதுடன், அதே போன்று இந்தப் பரீட்சையையும் இரத்துச் செய்து மீள நடத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியை வழங்குமாறு பரீட்சார்த்திகள் சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆளுநர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக பரீட்சார்த்திகள் சார்பில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இம்முறைப்பாடு சமர்ப்பிக்கும் வேளையில் கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள டிப்ளோமாதாரிகள் பங்கேற்றிருந்ததுடன், தமது ஆதங்கங்களையும் தெளிவாக ஆளுநரின் கவனத்திற்கு எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.