பறவை காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது

புதுடெல்லி,
கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் கேரளாவில் வாத்துகளிலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காகங்களிலும், இமாசல பிரதேசத்தில் புலம்பெயர் பறவைகளிலும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இந்த மாநிலங்களில் வைரஸ் பரவும் மையங்களாக 12 இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. இங்கு கடந்த ஒரு வாரத்துக்குள் ஆயிரக்கணக்கான மேற்படி பறவைகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக கேரளாவில் 1,700-க்கும் அதிகமான வாத்துகள் உயிரிழந்திருக்கின்றன.
இந்த பறவைகளின் மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய போது, அவை பறவை காய்ச்சலால் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பறவை காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக, கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இந்த வைரஸ் மீண்டும் புகுந்திருக்கிறது. குளிர்காலத்தையொட்டி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பறவைகள் மூலம் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.இந்த வைரசால் ஏராளமான பறவைகள் செத்திருந்தாலும், இதுவரை அது மனிதர்களுக்கு தொற்றியிருப்பது குறித்த தகவல் இல்லை. இதைப்போல கோழி, வாத்து போன்றவற்றின் இறைச்சிகளை உண்பதால் பறவை காய்ச்சல் ஏற்படும் என்பதற்கான நேரடி ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.
இவ்வாறு பறவை காய்ச்சல் பரவ தொடங்கியிருப்பதை தொடர்ந்து, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக டெல்லியில் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை திறந்துள்ள அரசு, மேற்படி வைரசை கட்டுப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய கால்நடை, மீன்வளத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு விடுத்துள்ள ஆலோசனையில், ‘கோழிப்பண்ணைகள், வைரஸ் தொற்று கொண்ட பகுதிகளில் உயிரி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இறந்த பறவைகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். அவற்றின் மாதிரிகளை சரியான நேரத்தில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.
அத்துடன் பறவைகளின் வழக்கத்துக்கு மாறான உயிரிழப்பு உள்ளிட்ட தருணங்களின்போது மாநில வனத்துறையுடன் இணைந்து செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து கோழி இறைச்சி இறக்குமதிக்கு மத்திய பிரதேசம் அதிரடியாக தடை விதித்து உள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவுவது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தில் பறவை காய்ச்சல் நிலவரம் குறித்து ஆய்வு செய்தேன். இது தொடர்பாக கவலைப்படுவதற்கான சூழல் எதுவும் இல்லை. இந்த சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்று கூறினார்.
மாநிலத்தில் கோழிப்பண்ணைகள் அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இயங்க வேண்டும் என கூறிய அவர், அவற்றை தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பறவை காய்ச்சலை கருத்தில் கொண்டு குறுகிய காலத்துக்கு மட்டும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்திருப்பதாக கூறிய அவர், எனினும் எந்தெந்த மாநிலங்களுக்கு தடை என்பது குறித்து விரிவாக கூறவில்லை.
நாட்டின் பல பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவ தொடங்கியிருக்கும் செய்தி நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.