பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஒடிசாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஒடிய மொழி மற்றும் ஆங்கில வழிக்கல்வி  பயிற்றுவிக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.

காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு மதியம் 12.30 மணி வரை நடத்தப்பட்டன. பெற்றோரின் அனுமதிக்கு பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவர்கள் தங்கும் விடுதிகளும் செயல்படத் தொடங்கின. தற்போதைக்கு 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி புவனேஷ்வர் நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியை கூறும்போது, “கொரோனா தொடர்புடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி வருகிறோம். எங்கள் பள்ளியில் 400 மாணவர்களில் 250 மாணவர்கள் வருகை தந்துள்ளனர். மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்”  என கூறினார்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை.மாணவர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பள்ளி வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.8ம் வகுப்பு மாணவர்களுக்கு, 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு பாடங்களின் திருப்புதல் வகுப்பு 1 மணி நேரம் எடுக்கப்பட்டது.எந்த ஒரு மாணவரும் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments are closed.