பாடசாலைகளை மீளத் திறக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு, ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை மீளத் திறக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு, ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அனைத்து பாடசாலைகளையும் ஒரே நேரத்தில் மீளத் திறப்பது பாரிய ஆபத்துக்கு வழிவகுக்கும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் தவறியுள்தாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று பரவல் தொடர்பில் பெற்றோர்களின் மத்தியில் காணப்படும் அச்ச நிலைமை தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைகளை மீள திறப்பதன் மூலம், நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அரசாங்கம் சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான முடிவுகளை அரசாங்கம் தன்னிச்சையாக மேற்கொள்ளக்கூடாது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக, பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீளத் திறப்பதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.