பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை!

பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

அத்தோடு பாடசாலை சேவை பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று முதல் காவற்துறை போக்குவரத்து பிரிவினர் விஷேச சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்திலுள்ள பகுதிகளிலும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் தொடர்பில் கண்காணிப்பதற்கான சுற்றி வளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முகக் கவசம் அணியாமை , சமூக இடைவெளியை பேணாமை என்பவற்றுக்காக 11 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்று வரை 3022 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டதைப் போன்று தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான சுற்றுவளைப்புக்கள் வழமையைப் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

குறிப்பாக கொழும்பில் பொது மக்கள் அதிகளவில் ஒன்று கூடக்கூடிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய செயற்படுகின்றனவா என்பது தொடர்பில் அவதானிப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் , கொழும்பிலிருந்து பேருந்தில் வெளியிடங்களுக்குச் செல்பவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு இன்றிலிருந்து பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் எழுமாற்று பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்கள் எந்தளவிற்கு பாதுகாப்பாக இருந்தாலும் சாரதிகள் அல்லது நடத்துனர்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எனவே தான் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது மாத்திரமின்றி பாடசாலை சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்களில் தனிமைப்படுத்தல் விதிமுறை பின்பற்றப்படுகின்றதா? , மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா? என்பது தொடர்பில் அவதானிப்பதற்காக காவற்துறை போக்குவரத்து பிரிவினரால் விஷேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறான அனைத்து செயற்பாடுகளிலும் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Comments are closed.