பாடசாலை மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை

அம்பாறை – சம்மாந்துறை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் பாடசாலைக்கு வருவதாக வதந்தி பரவியுள்ளது.

இதனையடுத்து, பாடசாலையை முற்றுகையிட்ட பெற்றோர், தமது பிள்ளைகளை அழைத்துச் சென்றமையால், இன்று (19) காலை 11 மணியளவில் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

சம்மாந்துறையில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு, சுகாதார அதிகாரிகள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள  பாடசாலைக்குச் செல்லவுள்ளதாக பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பெற்றோர்கள் பாடசாலைக்கு படையெடுத்ததையடுத்து அங்கு அதிபர்களிடம் தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து விடுமாறும் ஒன்றும் இல்லாத பிள்ளைகளுக்கு பிசிஆர் எடுக்கவேண்டிய தேவையில்லை என அதிபர்களுடன் முரண்பட்டதையடுத்து, அங்கு பதற்ற நிலைமை தோன்றியது

இந்நிலையில், அதிபர்கள் அப்படியான நடவடிக்கை ஒன்றும் இல்லை எனவும் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்புகொண்டபோதும் அவர்கள் அப்படி ஒன்றும் இல்லையென தெரிவித்ததாக பெற்றோரிடம் தெரிவித்து, இது ஒரு வதந்தி எனத் தெரிவித்தனர்.

இருந்தபோதும், அதிபர்களின் பேச்சை பெற்றோர் பெருட்படுத்தவில்லை. தமது பிள்ளைகளை விடுமாறு அதிபர்களுடன் முரண்பட்ட நிலையில், அதிபர்களால் ஒன்று செய்யமுடியாத நிலையில் பெற்றோர் பாடசாலைக்குள் நுழைந்து தமது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.

Comments are closed.