பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்ட விமானம்

சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் கனரக வாகனங்கள் சிக்கிக் கொண்டு நிற்கும் செய்திகளை அவ்வப்போது நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால், வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சாலையில் விமானம் ஒன்று  சிக்கி கொண்டு  செல்ல முடியாமல் நிற்கும் செய்திகளை பெரும்பாலும் அதிகம் நாம் கேள்விப்பட்டிருக்க முடியாது.
ஆனால், அதற்கு நிகரான ஒரு நிகழ்வுதான் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது. அதாவது, டெல்லியில் பரபரப்பான சாலை ஒன்றின் நடை மேம்பாலத்திற்கு கீழ் சிக்கிக் கொண்டு  ஏர் இந்தியா விமானம் ஒன்று நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வந்தது.
இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ காலாவதியான பழையவிமானம் ஒன்று விற்பனை செய்யப்பட்டது. அதை வாங்கியவர் நேற்று இரவு கனரக வாகனம் மூலமாக எடுத்துச்சென்றுள்ளார். கனரக வாகனத்தின் ஓட்டுநரின் தவறான கணிப்பால் நடைமேம்பாலத்திற்கு கீழ் விமானத்தின் பாகங்கள்  தட்டியுள்ளன.
இதனால், மேற்கொண்டு செல்ல முடியாமல் நடு வழியில் விமானத்துடன் அந்த கனரக வாகனம் நின்றுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்த சம்பவத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. ஏனெனில் பயன்பாட்டுக்கு தகுதியற்ற அந்த விமானம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டது” என்றார்.
ஆனால், டெல்லியின் எந்த பகுதியில் விமானத்துடன்  கனரக வாகனம் சிக்கியது, எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

Comments are closed.