பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்தவியட்நாம் தூதர்

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை மற்றும் வியட்நாம் இடையே இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது எனத் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

வியட்நாமிலிருந்து இலங்கைக்கு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்த தூதுவர், 2019ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது எனவும் சுட்டிக்காட்டினார்.

முதலீடுகளுக்கு மேலதிகமாக இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு தமது நாடு ஆர்வத்துடன் காணப்படுகின்றது எனவும் தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.

இதற்கு உடன்பாடு தெரிவித்த பிரதமர், வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த உரிமையை அடிப்படையாகக் கொண்டு இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமான வகையில் பரஸ்பர உறவை உறுதிபடுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினார்.

வியட்நாம் பௌத்த விகாரையொன்றை இலங்கையில் நிறுவுதல் மற்றும் இரு நாட்டு மதத் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கல்வி பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சுமார் நூறு வியட்நாம் பௌத்த பிக்குமார் இதுவரை இலங்கையில் கல்வி பயின்று வருகின்றனர்.

நாடாளுமன்ற உறவை மேம்படுத்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இருநாடுகளுக்கும் இடையே தற்போது காணப்படும் ஒத்துழைப்பு வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கான வியட்நாம் தூதுவராக ஹோ தீ தான் ட்ருக் கடந்த மார்ச் மாதம் முதல் சேவையாற்றி வருகின்றார்.

Comments are closed.