பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் பயணம்

பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தருகிறார்.  அதன்பின் டேராடூன் நகரில் அவர் ரூ.18,000 கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சி திட்டங்களை தொடங்கி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.அங்கு விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட உள்ளார்.

இதுகுறித்து  பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

பிரதமர் மோடி இன்று  உத்தரகாண்ட் மாநிலத்தில் 11 வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். அதில் ரூ.8,300 கோடி மதிப்பில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தட சாலை உள்ளிட்டவை அடங்கும். இதன்மூலம், டெல்லியிலிருந்து டேராடூன் செல்வதற்கான பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 2.5 மணி நேரமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வனவிலங்குகள் நடமாட்டத்திற்கு இடையூறு இல்லாத வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்காக சுமார் 12 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. மேலும், வன விலங்குகள் சாலையின் குறுக்கே சென்று விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட உள்ளது.

மேலும், பத்ரிநாத் மற்றும் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவுகள் போன்ற பாதிப்பு ஏற்டும் போது மக்கள் பாதுகாப்பாக பயணித்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள  சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

டேராடூனில் குழந்தைகள் பாதுகாப்பு நகர திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம், குழந்தைகள் நகரின் சாலைகளில் பாதுகாப்பாக பயணம் செய்ய வழிவகுக்கும்.

ரூ.500 கோடி மதிப்பில் ஹரித்வாரில் மருத்துவக் கல்லூரி அமைத்திடுவதற்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். ஸ்மார்ட் ஆன்மீக நகர திட்டத்தின்படி, பத்ரிநாத்தில் மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டுகிறார்.

யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 120 மெகாவாட் திறனுள்ள வியாசி நீர்மின்நிலைய திட்டம் மற்றும் டேராடூனில் இமயமலை கலாச்சார மையத்தினையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.டேராடூனில் நவீன நறுமணப் பொருட்கள் மற்றும் நறுமண ஆய்வகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இவ்வாறு பிரதமர் அலுவலகம்  தெரிவித்து உள்ளது.

Comments are closed.