பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்

உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று  செல்கிறார். அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.இன்று  வாரணாசியில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.870 கோடிக்கும் மேல் மதிப்புடைய 22 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

வாரணாசியின் கர்கியாவோன் பகுதியில் உள்ள உத்தரப்பிரதேச மாநில தொழில் வளர்ச்சி ஆணைய உணவுப் பூங்காவில், ‘பனாஸ் பால் பண்ணைக்கு’ பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.  30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்தப் பால்பண்ணை சுமார் ரூ.475 கோடி செலவில் கட்டப்படுவதுடன், தினந்தோறும் 5 லட்சம் லிட்டர் பாலை குளிரூட்டும் வசதிகளை பெற்றிருக்கும். இது அப்பகுதியின் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கும் உதவிகரமாக அமையும்.

வாரணாசி ராம்நகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஆலைக்காக பயோ கேஸ் (உயிரி எரிவாயு) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்திய தர நிர்ணய அமைவனம், தேசிய பால்வள வளர்ச்சி வாரியத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ள பால் பொருட்களுக்கான மதிப்பீடு திட்டத்திற்குரிய இணையதளத்தை தொடங்கி வைத்து இலட்சினையையும் பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார்.

அடித்தட்டு மக்களுக்கான நில உரிமைப் பிரச்சினைகளைக் குறைக்கும் மற்றொரு முயற்சியாக, மத்திய பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த  இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்போருக்கு ‘கரோனி‘ எனப்படும் கிராமப்புற குடியிருப்பு உரிமை ஆவணங்களை பிரதமர் காணொலி காட்சி மூலம் வழங்க உள்ளார்.

ரூ.107 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசிரியர் கல்விக்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்கலைக் கழக இடைமையம்  மற்றும் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட திபெத்திய உயர் கல்விக்கான மத்திய நிறுவனத்தின் ஆசிரியர் கல்வி மையம் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த திட்டங்களையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மேலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் கரூண்டி தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர் குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளும் பிரதமரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

பிரயாக் ராஜ் மற்றும் பதோகியில் உள்ள இரண்டு 4 வழிச்சாலைகளை 6 வழிச்சாலைகளாக அகலப்படுத்தும்  திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இது வாரணாசிக்கான போக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதாகவும் அமையும்.

இந்தப் புனித நகரில் சுற்றுலாத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக வாரணாசியில் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜீ கோவில் துறவி கோவர்தனுடன் தொடர்புடைய சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளையும் பிரதமர்  தொடங்கி வைக்க உள்ளார்.

இது தவிர, வாரணாசி தெற்காசிய மண்டல மையத்தில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிவேக இனப்பெருக்க மையம், பயாக்பூர் கிராமத்தில் மண்டல தர பரிசோதனை ஆய்வுக் கூடம் மற்றும் பிந்த்ரா தாலுக்காவில் வழக்கறிஞர் அலுவலக கட்டடம் உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்

Comments are closed.