புதிய எரிவாயுவில் ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனத்தின் சமையல் எரிவாயு உரிய தரத்தைக் கொண்டிருக்கவில்லையென தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் (12-12-2021) லிட்ரோ நிறுவனத்திற்கு ஒரு கப்பலில் சமையல் எரிவாயு கொண்டுவரப்பட்டது. அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியதில், வாசனையை அறிந்துகொள்ளும் பதார்த்தமான, எ(த்)தில் மேகெப்டனின் அளவு, 15 க்கும் 17க்கும் இடையில் இருக்க வேண்டும் என்ற போதிலும், அதற்கும் குறைந்த மட்டத்திலேயே அது இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் விகிதங்கள் 29க்கு 69 என்ற அடிப்படையில் இருப்பதாக நம்பகத்தன்மையான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுயாதீன நிறுவனத்தின் பரிசீலனையின்படி, இந்த எரிவாயுவில் ப்ரொப்பேன் 33 சதவீதமாக இருப்பதென அறியக் கிடைக்கிறது.

இதேவேளை, உரிய தரமற்ற எரிவாயுவை தரையிறக்க அனுமதிக்கப் போவதில்லையென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய, நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயு, சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமையவே, தீர்மானம் மேற்கொள்ளப்படும். இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையை மாத்திரம்கொண்டு தீர்மானம் மேற்கொள்ள முடியாது. எ(த்)தில் மேகெப்டன் தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்றவுடனேயே இறுதி நிலைப்பாட்டை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.