பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள் பதிவுகளாகவே உள்ளன- சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதுடன் அவை வெறும் பதிவுகளாக மட்டுமே காணப்படுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பெண்களின் பிரச்சினைகளை அறிந்துக் கொண்டு அவர்களுக்கான தீர்வினை வழங்கும் நோக்கத்திலான நடமாடும் சேவையை வழங்க எதிர்பார்துள்ளதுடன், அவர்களுக்கென்று தனியான ஜனாதிபதி செயலணி மற்றும் ஜனாதிபதி ஆணைகுழுவை அரச அனுமதியுடன் ஸ்தாபிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் தின நிகழ்வுகள் தலவத்துக்கொட பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றுள்ளது. இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பெண்களை முதல்நிலைப்படுத்தும் விசேட ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பதே எமது நோக்கமாகும். அரச அதிகாரத்துடன் அதனை ஸ்தாபிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இதேவேளை பெண்களின் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பெண்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதுடன் , அவை வெறும் பதிவுகளாக மட்டுமே காணப்படுகின்றன. இந்நிலையில் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனால் எமது சட்டவிதிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆட்சி அதிகாரங்கள் இல்லாதவர்கள் கூட பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். அதற்கமைய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தங்களது உரிமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுவதற்காக எம்மால் உதவி ஒத்தாசைகளை வழங்க முடியும்.

இதற்கு பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு போதிய வசதிகளை செய்துக் கொடுத்து, அவர்கள் ஊடாக எமது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.

பெண்கள் தங்களது வீடுகளில் மட்டுமன்றி வெளியிலும் பல்வேறு கொடுமைகளுக்குள்ளாகி வருகின்றார்கள். எனினும் பெண்களின் தலைமையிலான குடும்பங்களும் இருக்கின்றன. அதற்கமைய இவ்வாறு 2 இலட்சம் குடும்பங்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

நாடாளுமன்றம் மற்றும் மாகாணசகைளில் பெண்களின் உறுப்புரிமை மிகவும் குறைந்தளவிலே உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் பெண்களாலும் ஆட்சி அதிகாரங்களை செயற்படுத்த முடியும் என்று காண்பித்துள்ளனர்.

அவர்களை ஆதாரமாக கொண்டு எதிர்வரும் காலங்களில் பெண்கள் இந்த தலைமை பொறுப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.