மகளுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்

கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் சடலம் பொலிஸாரினால் இன்று (05) மீட்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியில் சடலம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரையும் அழைத்துக் கொண்டு சடலம் இருந்த இடத்திற்கு விரைந்த போலிசார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த குழந்தையை யே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச்செல்லப்பட்டது. நாளாந்த கூலி தொழிலாளியான குறித்த சந்தேக நபர், இரண்டாவது திருமணம் செய்தவர் என்பதுடன் தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

குழந்தையை பிரசவித்த 19 வயதான தாய் கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.