மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது

சிறைச்சாலைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று (05) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அரசியல் கைதிகளின் உறவினர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்து, ஜனாதிபதியின் புத்தாண்டு பொங்கல் பரிசாக அரசியல் கைதிகளை விடுதலை செய், எமது உறவுகளை சிறைகளில் அடைத்து மரணமடைய வைக்காதே மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்குங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷமெழுப்பினர்.

கொவிட் – 19 வைரசைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், அருட்தந்தை ஜோசப் மேரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முண்ணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், இணையம் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் சர்வ மத சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு இணைப்பாளர் எஸ் சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.