மலையகத்திலும் டீசலுக்காக நீண்ட வரிசை

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தொடர்ந்து மலையகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஹட்டன், நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேசங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இந்திய பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதனால் வீதியில் ஒரு சில இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.

பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டிருந்த ஒரு சில தனியார் பேருந்துகள் டீசல் இல்லாமையின் காரணமாக வீதிக்கு இடை நடுவில் நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலைப் பெறுவதற்காக நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் கொள்கலன்களுடன் நின்ற போதிலும் டீசல் இன்மையால் போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத நிலைமைக்கு உள்ளாகினர்.

இதேவேளை, இதேவேளை டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விற்பனை நடவடிக்கை 60 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஒன்றிணை பொருளாதார மத்திய நிலைய ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கறிகளை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்து செல்வதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து, மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும் நிலையில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் என்பவற்றுக்கு தேவையான டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் டீசல் கொள்வனவிற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக விவசாயிகள் மற்றும் வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.