மாணவன் தவறி வீழ்ந்து மரணம்

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஏழு மாடி கட்டடமொன்றில் இருந்து கீழே வீழ்ந்து 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனையின் போது, அவரின் உடலில் ஐஸ் போதைப்பொருள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பம்பலப்பிட்டி கிரெட்ஸர் பிளேஸில் உள்ள 7 மாடி கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்றில் வசித்து வந்த குறித்த சிறுவன், கடந்த 29 ஆம் திகதி அக்கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.

அவர் தனது பெற்றோருடன் குறித்த குடியிருப்பு தொகுதியில் 5 ஆவது மாடியில் வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.

இந்நிலையில், குறித்த கட்டடத்தில் இருந்த சிசிரீவி காட்சிகளை மையமாகக் கொண்டு அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதன்போது, குறித்த மாணவன் முச்சக்கர வண்டியில் வருகை தருவது மற்றும் மாடியிலிருந்து தவறி விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகியிருந்தன.

சம்பவம் இடம்பெறும் போது அவரின் தாய் சமய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வெளியே சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.