மீசாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

மீசாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று(16) இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா – கனகராயன்குளம் பகுதியினைச் சேர்ந்த முகுந்தரூபன் துவாரகன் (வயது-21) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த இளைஞன் கிளிநொச்சி பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார்.

கடந்த 6ஆம் திகதி மீசாலை பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்துள்ளார்.

இதன் போது மீசாலை மில்லடி பகுதியில் குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளினை முந்திச் சென்ற பட்டா வாகனம், சமிக்கை எதுவும் போடாமல் இடப்பக்கம் திரும்ப முற்பட்டது.

இதன் போது, மோட்டார் சைக்கிள் பட்டா வாகனத்துடன் சடுதியாக மோதி விபத்துக்குள்ளானது.

தூக்கி வீசப்பட்ட இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் இளைஞன் நேற்று(16) இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடிர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இறப்பு விசாரணை இடம்பெற்றது.

உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Comments are closed.