மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(15) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அந்தத் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுக்காமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

அதனை விடுத்து, சர்வதேசத்தில் மசகு எண்ணெய் தடுப்பாடு மற்றும் விநியோகத்தர்களின் பிரச்சினை காரணமாக இந்தத் தட்டுப்பாடு ஏற்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாகப் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மேலும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார்.

Comments are closed.