மீண்டும் கேப்டன் ஆன ஸ்டீவன் ஸ்மித்

அவுஸ்திரேலியா அணிக்கும் மீண்டும் கேப்டன் ஆனார் ஸ்டீவன் ஸ்மித்.

ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான அணியை, அவுஸ்திரேலியா அறிவித்தபோது டிம் பெய்ன் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவர், பெண் ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார் காரணமாக, கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸும், துணைக் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்தும் அறிவிக்கப்பட்டனர்.

டிசம்பர் 8ஆம் திகதி துவங்கிய முதல் போட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி, ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக, கேப்டன் பாட் கம்மின்ஸ் கேப்டனாக முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இறுதியில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிராமக தயாரானது.

இன்று இரண்டாவது டெஸ்ட் துவங்க விருந்த நிலையில், நேற்று இரவு பாட் கம்மின்ஸ் கொரோனா ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால், அவர் இரண்டாவது போட்டியில் பங்கேற்க மாட்டார், மூன்றாவது டெஸ்டில்தான் பங்கேற்பார் என அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு “பால் டெம்பரிங்” சர்ச்சையில் சிக்கி கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கேப்டன் பதவியை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.