மீண்டும் தோல்வியடைந்த ஈரான்

ஈரான் கடந்த வியாழக்கிழமை ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தியது. ஆனால், அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோளை புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015-ம் ஆண்டு ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளும் என்பதே ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சிக்காலத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு பின்னர் அங்கு ஜனாதிபதியாக வந்த டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் 2018-ம் ஆண்டு அறிவித்தார். அதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையில், விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் ஈரான் ஆர்வம் காட்டுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஈரான் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஜாபர் என்ற செயற்கைக்கோளை புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்த முடியாமல் தோல்வியடைந்துவிட்டது. இப்படி சமீப காலத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி ஈரான் தோல்விகளைத்தான் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

இதனை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை 3 சாதனங்களுடன் கூடிய ஒரு செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுமா? என்பதில் கேள்வி நிலவி வந்தது.

இந்நிலையில், செயற்கைக்கோளை பூமி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈரான் மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

செயற்கைக்கோளுடன் பூமி சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைய நொடிக்கு 7,600 மீட்டர் வேகத்தில் செல்லவேண்டிய சூழ்நிலையில் ராக்கெட் 7,350 மீட்டர் வேகத்தில் மட்டுமே சென்றுள்ளது. இதனால், செயற்கைக்கொளை ராக்கெட்டால் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தமுடியாமல் முயற்சி தோல்வியடைந்துவிட்டது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

Comments are closed.