மேல் மாகாணத்தில் பாடசாலைகள் அனைத்தும் இன்றைய தினம் திறப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

இதன்படி மேல் மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் 79 ஆயிரம் மாணவர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களின் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்யும் நோக்கில் பாடசாலைகளை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேல் மாகாணத்தில் காணப்படும் ஆயிரத்து 576 பாடசாலைகளில் 900 பாடசாலைகள் மீள திறக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை காணப்படும் நிலைமை தொடர்பில் அவதானித்து, சுகாதார தரப்பினரால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைவாக, மேல் மாகாணத்தின் ஏனைய பாடசாலைகளையும் படிப்படியாக திறப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.