மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் வெளிவந்த தகவல்!!
மேல் மாகாணத்தில் பாடசாலைகளில் ஒருசில வகுப்புகளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள கல்வி அமைச்சினால் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக இணையவழி கல்வி நடவடிக்கையை கொவிட் முதலாவது அலை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிலேயே ஆரம்பித்திருந்தோம். அதேபோன்று தொலைக்காட்சி அலைவரிசைகளினூடாக அனைத்து வகுப்புகளுக்குமான பாடங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் இது போதுமானது என நாங்கள் நினைக்கவில்லை.
அத்துடன் தற்போது மேல்மாகாணம் தவிர்ந்து ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முதலாவது தவணை விடுமுறை வழங்கப்பட்டிருக்கின்றன.
அந்தவகையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் கல்வி திட்டத்துக்கமைய முறையாக இடம்பெற்று வருகின்றன.
இருந்தபோதும் மேல் மாகாண பாடசாலைகளை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடி நாளைய தினத்துக்குள் தீர்மானம் ஒன்றை எடுக்க இருக்கின்றோம்.
எனினும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க முடியாவிட்டாலும் தரம் 5, கல்வி பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர வகுப்புகளை ஆரம்பிக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் பாடசாலை மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்போது அனைத்து பாடப்புத்தங்களையும் சுமந்துசெல்வது பாரியதொரு சுமையாக இருக்கின்றது.
வருடத்துக்கு 3 பாடசாலை தவணைகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் முதலாவது தவணைக்குரிய பாடத்திட்டங்களை ஒரு புத்தகத்துக்கு உள்வாங்க தற்போது நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமை மூன்றில் இரண்டு வீதம் குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.
இதன்படி 3 தவணைக்கும் மாணவர்கள் அந்த தவணைக்குரிய பாடப்புத்தங்களை மாத்திரம் கொண்டுசெல்ல முடியும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.