யாழில் வீட்டை உடைத்து திருடிய நபர் சிக்கினார்

யாழ்ப்பாணம் – சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடிய இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்ய முயன்றபோது, சந்தேக நபர்  சிக்கியுள்ளதுடன், அதற்காக உதவிய தரகரும் யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

மேற்பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அதன்போது, அவ்வீட்டில் எவரும் இருந்திருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரால், வீட்டிலிருந்த 43 அங்குல தொலைக்காட்சி, டிவிடி உபகரணம் மற்றும் சமையல் அறை இலத்திரனியல் உபகரணங்கள் என்பன திருட்டப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தடயவியல் விசாரணைகளை அடுத்து கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்தவரும், அச்சுவேலியை வசிப்பிடமாகக் கொண்டவருமான 30 வயதுடைய சந்தேக நபரை யாழ்ப்பாண தலைமையக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், கடந்த 10ஆம் திகதி அச்சுவேலியில் நபரொருவரைத் தாக்கி அவர் அணிந்திருந்த மோதிரத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன், குறித்த நபருக்கு தொடர்பு உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் அந்த மோதிரத்தை அடகு வைத்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Comments are closed.