யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இராணுவ அதிகாரி
வடமாகாணத்திற்குப் பொறுப்பாக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் பாணந்துறையில் உள்ள வீடொன்றில் வைத்து 20 வயதுடைய யுவதியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக நேற்று (14) காவல்நிலையத்துக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி யுவதி, கடந்த ஆகஸ்ட் மாதம் தந்திரிமலையில் இருந்து இராணுவ அதிகாரியின் வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாகவும், எவரும் இல்லாத நேரத்தில் சந்தேகநபரான இராணுவ அதிகாரி பல தடவைகள் தன்னை வன்புணர்வு செய்துள்ளார் என்றும் முறைப்பாடு செய்துள்ளார்.
தந்தையை இழந்த குறித்த யுவதி தனது குடும்ப செலவுகளை கவனிப்பதற்கான பணிப்பெண்ணாக சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த யுவதிக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் வைத்தியர் அவரிடம் வினவியபோது, இச்சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த வைத்தியர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பாணந்துறை தெற்கு காவல்துறை பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.