ரம்புக்கனை காவல்துறை பிரிவில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டது

ரம்புக்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணி முதல் நீக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் ரம்புக்கன பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

போராட்டத்தின் போதான மோதலில் காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் மொத்தமாக 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை தொடருந்து கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

எனினும், அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிக்கு குழுவொன்று தீ வைத்துள்ளதாகவும், எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீ வைக்க முற்பட்ட போது குழுவினரை கலைக்கும் முயற்சியாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த குருவிட்டகே டொன் சமிந்த லக்ஷான் (42) என்ற  நபர் உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Comments are closed.