வங்காளதேச அணி 401 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 328 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 2-வது நாள் முடிவில் 67 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து இருந்தது. மக்முதுல் ஹசன் ஜாய் 70 ரன்னுடனும், கேப்டன் மொமினுல் ஹக் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மக்முதுல் ஹசன் ஜாய் (78 ரன்கள்) மேலும் 8 ரன்கள் எடுத்த நிலையில் நீல் வாக்னெர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் 12 ரன்னில் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

இதனை அடுத்து விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ், மொமினுல் ஹக்குடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று நிதானமாக ஆடி அணியை முன்னிலை பெற வைத்தனர். அணியின் ஸ்கோர் 361 ரன்னாக உயர்ந்த போது மொமினுல் ஹக் (88 ரன்கள், 244 பந்து, 12 பவுண்டரி) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மொமினுல் ஹக்-லிட்டான் தாஸ் இணை 5-வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் திரட்டியது. சற்று நேரத்தில் லிட்டான் தாஸ் (86 ரன்கள், 177 பந்து, 10 பவுண்டரி) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பிளன்டெல்லிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 156 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 401 ரன்கள் குவித்தது. யாசிர் அலி 11 ரன்னுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ஆசிய கண்டத்துக்கு வெளியே டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் வங்காளதேச அணி அதிக ஓவர்கள் ஆடியது (156 ஓவர்கள்) இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்பு அந்த அணி 2017-ம் ஆண்டில் வெலிங்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 152 ஓவர்கள் ஆடியதே அதிகபட்சமாக இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. வங்காளதேச அணி இதுவரை 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Comments are closed.