வடக்கு , கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

வடக்கு , கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும், பயிற்சி ஆணைகள் தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் கருத்தை தாம் வரவேற்பதாகவும் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கும் நோக்கில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

16 வயதிலிருந்து சகல மாணவர்களும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் எனவும், அவர்களுக்கு த​மிழ் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

போதிய தமிழ் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லையாயின், முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்த பணியைச் செய்யச்சொல்லி ஊதியம் வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்த விதத்திலும் சிங்கள மொழியில் மாணவ மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு பயிற்சியாளர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுமாயின், தென்னிந்தியாவில் இருந்து தமிழ் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம் என்ற ஆலோசனையையும் அவர் வழங்கியுள்ளார்.

Comments are closed.