வவுனியாவில் கோர விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

வவுனியா ஏ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம்  பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தடைப்பட்டது.

குறித்த பகுதியில் நின்றிருந்த பழமையான புளியமரம் (28) இரவு 8 மணியளவில் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தையும் சேதப்படுத்திக்கொண்டு ஏ9 பிரதான வீதியின் குறுக்காக விழுந்தது.

குறித்த நேரத்தில் அவ்வீதியால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரச பேருந்து ஒன்றும் பயணித்திருந்தது.

எனினும் மரம் முறிந்துவிழுவதை அவதானித்த பேருந்தின் சாரதி விரைந்து செயற்பட்டு பேருந்தினை வீதியின் கரையால் செலுத்தியமையால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விபத்தினால் ஏ9 வீதியுடனான போக்குவரத்து ஒரு மணிநேரம் தாமதமடைந்திருந்தது.
இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Comments are closed.