விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பம்பல பிரதேசத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு திம்பிரியகஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை மாலை புத்தளம் பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கொழும்பு பகுதியிலிருந்து புத்தளம் பகுதியை நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.