விமான நிலையம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

உத்தரப் பிரதேசத்தில் 2012 வரை லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. குஷிநகரில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் அக்டோபர் 20 அன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. அதே நேரத்தில் அயோத்தியில் விமான நிலையத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஐந்தாவது சர்வதேச விமான நிலையமானது நொய்டாவிற்கு அருகிலுள்ள ஜெவாரில் வர உள்ளது. இந்த விமானநிலையமும் கட்டமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நாட்டில் அதிக சர்வதேச விமான நிலையங்களை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருக்கும்.
இந்த விமான நிலையம் வருகிற 2024-ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என்றும் ரூ.34 ஆயிரம் கோடியில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நொய்டா சர்வதேச விமான நிலைய பணிகளுக்கு இன்று(நவம்பர் 25) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நவம்பர் 25, உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் இந்தியா மற்றும் உத்தரபிரதேசத்தின் முன்னேற்றங்களுக்கு ஒரு முக்கியமான நாள். மதியம் 1 மணிக்கு நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இந்த திட்டம் வர்த்தகம், இணைப்பு மற்றும் சுற்றுலாவை கணிசமாக மேம்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.