விரைவில் 18 வயதானோருக்கு ‘பூஸ்டர் டோஸ்’

அமெரிக்காவில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ள 65 வயதான மூத்த குடிமக்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனாவுக்கு எதிரான ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது கொரோனாவை தடுப்பதில் நல்ல பலன் அளிக்கிறது என தரவுகள் காட்டுகின்றன.

இதையடுத்து 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ரோச்செல்லி வாலன்ஸ்கி கூறுகையில், “ 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான தரவுகளை தற்போது எப்.டி.ஏ. (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) ஆராய்ந்து வருகிறது” என தெரிவித்தார்.

அதே நேரத்தில் 18 வயதான அனைவருக்கும் எப்போது ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவது என்பது பற்றி காலவரையறை எதுவும் செய்யப்படவில்லை என்று ரோச்செல்லி வாலன்ஸ்கி கூறினார். ஆனால் இந்த வாரமே அதற்கான அங்கீகாரத்தை எப்.டி.ஏ.வும், சி.டி.சி.யும் வழங்கி விடக்கூடும் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. எனவே விரைவில் 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவது தொடங்கி விடும்.

அதே நேரத்தில் கலிபோர்னியா, நியூ மெக்சிகோ, ஆர்கன்சாஸ், மேற்கு வெர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்கள், 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவதில் முந்திக்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Comments are closed.