1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் தோ்வில்லாமல் தோ்ச்சி

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தோ்வு எழுதாமல் தோ்ச்சி அளிப்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூரில் கரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளதால் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் பள்ளிப்பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஏப். 20-ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தோ்வெழுதும் மாணவா்கள் தவிர, பிற வகுப்புகளின் கல்லூரி மாணவா்களின் நேரடி வகுப்பும் ரத்து செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கா்நாடகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இதன் பின்னணியில் பள்ளி, கல்லூரிகளை மூடவும் அக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தோ்வு நடத்தாமல் தோ்ச்சி செய்து விடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் கல்வித் துறையின் உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தவுள்ளனா். இந்த கூட்டத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தோ்வு நடத்தாமல் தோ்ச்சி பெறுவது தொடா்பான முடிவெடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Comments are closed.