3200 இயற்கை கழிவறைகளை அமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை கழிவறை வசதியற்ற வறிய மக்களுக்கு 360 மில்லியன் ரூபா செலவில் 3200 இயற்கை கழிவறைகளை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையை பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மேற்கொண்டுள்ளார்.

பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பில் நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். சேனாநாயக்க, மேலதிக செயலாளர் கலாநிதி, எஸ். அமலநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரதிநிதி என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உரையாற்றுகையில் இவ்வாண்டு 25 மில்லியன் ரூபா செலவில் ஆடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை குறுகிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் 17 ஆயிரத்தி 723 இயற்கை கழிவறை தேவை காணப்படுகின்றது. இவற்றில் எதிர்வரும் ஆண்டு 3200 இயற்கை கழிவறைகளை 360 மில்லியன் செலவில் அமைத்துக் கொடுக்க அனுமதியும் சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தினை எதிர்வரும் 9 மாதங்களில் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் இவற்றுக்கான பயனாளிகளின் விபரங்களை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மாவட்ட செயலாளரூடாக அமைச்சுக் அனுப்பி வைக்குமாறு அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எஸ். அமலநாதன் பிரதேச செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார். இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபாவும், இலங்கை அரசினால் 60 மில்லியன் ரூபாவுமாக 360 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இஞ்சி உழுந்து, பழவகை உற்பத்திக்கான உதவிகள், தொடர் மாடி வீட்டுத்திட்டங்கள், கோழி வளர்பிற்கான நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டங்கள் போன்றவற்றை எதிர்வரும் ஆண்டில் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அமைச்சர் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.