540 புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடிவு: கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழக இசட் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் ஒரு தொகுதி மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளமையை சரி செய்ய 540 புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றில் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி, நீதித்துறை நடைமுறைக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில் புதிய மாணவர்களைச் சேர்க்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்துக்கு அமைய பௌதிகவியல் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களால், அநீதியைக் காரணம் காட்டி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றிருந்தாலும் ‘இசட்’ வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிகிடைக்கவில்லை என்று அவர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.