73வது சுதந்திர தின நிகழ்வுகள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று கொண்டாடப்படுகின்றது..

உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் 73வது சுதந்திர தின நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

சுதந்திர தின கொண்டாடத்தின் மரியாதை அணி வகுப்பில் 3,271 இராணுவத்தினர், 808 கடற்படையினர், 997 வான்படையினர், 664 காவல்துறையினர் கலந்து கொள்கின்றனர்.

இது தவிர காவல்துறை விசேட அதிரடி படையின் 432 பேரும், சிவில் பாதுகாப்பு பிரிவின் 558 பேரும் சுதந்திர நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

அத்துடன் இதன்போது இடம்பெறவுள்ள கலாசார அணிவகுப்பில் 340 இசை மற்றும் நடன கலைஞர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட 13 பிரிவினர் இந்த நிகழ்வுகளில் இணைகின்றனர்.

அத்துடன் 11 பாடசாலைகளை சேர்ந்த 45 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய கீதம் இசைப்படவுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக 73வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் 73வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 146 சிறைக் கைதிகள் இன்றைய தினம் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க, விடுவிக்கப்படவுள்ள அனைத்து கைதிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே அவர்கள் வெளிச்செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் சிறு குற்றங்களை இழைத்தவர்களே இவ்வாறு ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 337 இராணுவ அதிகாரிகள் மற்றும் முப்படையை சேர்ந்த 8,266 உறுப்பினர்கள் தரமுயர்த்தப்படவுள்ளனர்.

இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 73வது சுதந்திரதின நிகழ்வினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபானசாலைகளையும் இன்று மூடி வைக்குமாறு மதுவரி திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தில் மதுபானசாலைகள் மூடப்படும் திகதிகள் குறித்த அறிவிப்பையும் அந்த அறிக்கையில் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 73வது சுதந்திர நிகழ்வுகளை இன்று காலை 7.30 முதல் நேரலையாக எமது ஹிரு தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம்.

Comments are closed.