இந்தியாவில் கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து உள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதைப்போல நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றும் 2 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து விட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் மிகவும் அதிகமாக அதாவது 2-வது அலையில் இருந்ததை விட அதிகமாக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறியிருப்பதாவது:-
நாம் தற்போது கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிவேகமான உயர்வை எதிர்கொள்கிறோம். இதற்கு ஒமைக்ரானின் ஆதிக்கமே காரணம் என நாங்கள் நம்புகிறோம். நாட்டில் கடந்த 30-ந்தேதி தொற்று விகிதம் 1.1 சதவீதமாக இருந்தது. மறுநாள் இது 1.3 சதவீதமாக உயர்ந்து, தற்போது 5 சதவீதத்தை எட்டி இருக்கிறது.
கடந்த 30-ந்தேதி 13 ஆயிரமாக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 58 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இதன் மூலம் தொற்று விரிவடைந்து வருவது தெளிவாகிறது.
கொரோனா பரவலின் வேகத்தை மதிப்பிடும் ‘ஆர்’ மதிப்பீடு தற்போது 2.69 ஆக உள்ளது. ஆனால் நாட்டில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தபோதுகூட இந்த மதிப்பீடு 1.69 ஆகவே இருந்தது. இதன் மூலம் 2-வது அலையை விட அதிக வேகத்தில் தற்போது தொற்று பரவி வருவது உறுதியாகிறது.
அதேநேரம் தொற்று பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது டெல்லியில் 3.7 சதவீதமாகவும், மும்பையில் 5 சதவீதமாகவும் உள்ளது. இதுதான் நம்மிடம் இருக்கும் ஆரம்ப உள்ளீடு. இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு மற்றும் 2020-ல் கூட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் விகிதம் 20 சதவீதத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.
இதனால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றாலும், நிச்சயம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். முககவசம் அணிந்து கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.