பதிப்பகம்

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் கோயில்களிலும், மடங்களிலும், கவிராயர் இல்லங்களிலும், அரண்மனைகளிலும் முடங்கிக்கிடந்த பழந்தமிழ்ச் சுவடிகளை வெளியுலகுக்குக் கொண்டு வந்த பெருமை ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா ஆகியோரைச் சாரும்!

தமிழறிஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாய்மொழியாம் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியுள்ளனர். ஓலைச்சுவடிகளிலிருந்து பண்டைய தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கண்டெடுத்து சரிபார்த்து, திருத்தம் செய்து, பதிப்பித்த பெருமை ‘பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று புகழ்ந்துரைக்கப்படும் சி.வை.தாமோதரம் பிள்ளையையே குறிக்கும்.

தமிழ் இலக்கண, இலக்கியச் சுவடிகள் பதிப்பிக்கத் தொடங்கிய பின்பு தான், தமிழ் மொழியின் பரந்துபட்ட பரப்பு தெரியவந்தது. தமிழ் நூல்களை அழியாமல் காத்துப் பாமர மக்களிடையே பரவலாக்கிய பெருமை தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்களையே சாரும். தமிழ்ச்சுவடிப் பதிப்பு வரலாற்றில் ஆறுமுக நாவலருக்குப்பின் சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்புப்பணி போற்று தற்குரியது. அவர் தமிழ் நூல்கள் பலவற்றை முதன் முதலில் பதிப்பித்து தமிழுலகம் அறியச் செய்தார்.ஓலைச்சுவடிகளிலுள்ள எழுத்துக்களின் நிலைமை, ஓலைச்சுவடிகள் இருந்த அமைப்பு ஆகியவற்றைக் கண்டு மனம் வருந்தி கண்ணீர் சொரிந்தார். அன்னைத் தமிழுக்கு நேர்ந்த அலங்கோல நிலைமை கண்டு அங்கமெல்லாம் நொந்தார். இத்தகைய அவலநிலையை மாற்றித் தமிழன்னை எழிற்கோலம் கொள்ள வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தினாலேயே நூல் பதிப்புப் பணியில் ஈடுபட்டவர் சி.வை.தாமோதரம் பிள்ளை.

தாமோதரனார் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார். நீதிநெறி விளக்கவுரை,தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை ,வீரசோழியம்,திருத்தணிகைப் புராணம்,இறையனார் அகப்பொருள்,தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை,கலித்தொகை,இலக்கண விளக்கம்,சூளாமணி,தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை போன்ற நூல்களை பதிப்பித்து பாதிக்கத் துறைக்கு வித்டிட்டுள்ளார்.தற்போது பல இலக்கிய நூல்களின் எழுச்சி, தோற்றம் எல்லாவற்றிக்கு தமிழ் முன்னோடிகளின் முயற்சியே காரணமாகும்.நாங்கள் வாழும் 21 ஆம் நூற்றாண்டில் பல பதிப்பக நிலையங்களும் பதிப்பிக்கப்பட்ட இலக்கிய நூல்களையும் அவற்றின் பெருமையையும் கண்ணூடாக விளங்க வைப்பது தமிழ் முன்னூடிகளின் அரும்பணி ஆகும்