எறும்பின் அழுகை!

ட்டூ என்ற எறும்பை யாரோ மிதிச்சுட்டாங்களாம். அதனால ரொம்ப சத்தமா அழுதுச்சு. டாக்டர் எறும்பு வந்து, உடைஞ்ச காலுக்குக் கட்டுப்போட்டுச்சு. வலி தெரியாம இருக்க மருந்து கொடுத்துச்சு. ஆனாலும், ட்டூ எறும்புக்கு வலி குறையவே இல்ல. பாடகர் எறும்பு வந்து ஒரு பாட்டுப் பாட, இன்னொரு எறும்பு டிரம்ஸ் வாசிச்சது. அப்பவும் ட்டூ எறும்பு அழுகையை நிறுத்தல. `கிச்சன்’ எறும்பு ரொம்பக் கஷ்டப்பட்டு உருட்டிட்டு வந்த ஒரு ஜீனி மலையைக் கொடுக்க, அதெல்லாம் வேணாம்னு இன்னும் சத்தமா அழுதுச்சு ட்டூ. என்ன செய்தாலும் ட்டூவோட அழுகையை நிறுத்தமுடியலையேன்னு எல்லா எறும்புகளுக்கும் கவலையாயிடுச்சு. ஆனா, ட்டூ அழுவுற சத்தம் அந்த வீட்டில் யாருக்குமே கேட்கல ஒரே ஒரு ஆளைத் தவிர.

அந்த வீட்டில் இருந்த குட்டிப் பையன் விக்கிக்கு மட்டும் ட்டூவின் அழுகை கேட்டுச்சு. தன்கிட்ட இருந்த சாக்லெட்டைக் கொஞ்சமா உடைச்சு, ட்டூக்குக் கொடுத்தான் விக்கி. ஆனா, ட்டூ அதைத் திரும்பிக்கூடப் பார்க்கலை. அப்புறம், அவன்கிட்ட இருந்த பொம்மைக் கார்ல, ட்டூவைத் தூக்கிவெச்சான். அப்படியே அந்த வீடு முழுக்கச் சுத்திவந்தான். மொட்டை மாடிக்கும் அழைச்சுட்டுப் போனான். ஒரு வழியா ட்டூ அழுகை நின்னுச்சு. அப்போதான் எல்லா எறும்புக்கும் புரிஞ்சது. ட்டூக்கு இனிப்பைவிட முக்கியம் ஊர் சுத்துறது அல்லவா?

Comments are closed.