கூழாங்கல் நடைப்பயிற்சி பற்றி உங்களுக்கு தெரியுமா?

வெறும் காலில் நடப்பது குறைந்துவிட்டது. வீட்டில் டைல்ஸ், கிரானைட் போடுவதால் பலரும் வீட்டுக்குள்ளேயே கூட செருப்பு அணிந்து நடக்கும் பழக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அந்தக் காலத்தில் வெறும் காலில் நடந்தார்கள். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக இருந்தது. அப்படி வெறும் காலில் நடந்தது அவர்களுக்கேத் தெரியாமல் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. உண்மைதான்.
நம்முடைய நரம்புகள் பாதம் மற்றும் கையில்தான் முடிவடைகிறது. எனவேதான் கை மற்றும் பாதத்தில் அழுத்தம் தருவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று இயற்கை மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். செருப்பு இல்லாமல் வெறும் காலில் கூழாங்கற்கள் மீது நடக்கும்போது பாதத்தில் உள்ள நரம்பு புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இது உடலுக்கு புத்துணர்வையும் பலத்தையும் அளிக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. 2005ம் ஆண்டு Journal of the American Geriatrics Society வெளியிட்ட ஆய்வில், தொடர்ந்து கூழாங்கற்கள் மீது நடந்து பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைவது தெரியவந்துள்ளது. எல்லா வயதினரையும் கொண்ட குழுவினரை வாரத்துக்கு மூன்று மணி நேரம் என்ற வகையில் 16 வாரங்களுக்கு கூழாங்கற்கள் மீது நடைப்பயிற்சி செய்ய வைத்து ஆய்வு செய்துள்ளனர். இதில், அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருப்பது உறுதியாகி உள்ளது.
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் கூழாங்கல் நடைபயிற்சி உள்ளது. உடல் நலம் மட்டுமின்றி மன நலனையும் மேம்படுத்தும். பாதத்தில் தூண்டப்படும் முக்கிய உறுப்பு புள்ளிகள் காரணமாக உடல் உறுப்புகள் செயல்திறன் அதிகரிக்கிறது. மூளை, நுரையீரல், சிறுநீரகம், கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப் பெறுகின்றன.
இரவில் தூக்கமின்றி அவதியுறுபவர்கள் இந்த பயிற்சியை முயற்சி செய்து பார்க்கலாம். தொடர்ந்து கூழாங்கற்கள் மீது வெறும் காலில் நடப்பது தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள்.
கூழாங்கல்லின் மீது முதலில் நடைப்பயிற்சி செய்யும்போது மிகவும் கடினமாகவே இருக்கும். கஷ்டப்படாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதை மனதில் நிறுத்தி பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். முதலில் நிதானமாக நடைப்பயிற்சி செய்யுங்கள். அதன் பிறகு இயல்பான நடைப்பயிற்சி வேகத்தில் நடக்கலாம். ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் கூழாங்கற்கள் மீது நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது!

Comments are closed.