திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகப் பாட்டெழுதினாரா?

திருமூலரது வரலாற்றைச் சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் குறிப்பிடுவதன் வாயிலாகத்தான் அறியமுடிகிறது. பெரும்பாலானோர் அவர் ஆண்டுக்கு ஒரு பாடலாக எழுதினார் என்று கூறுவார்கள். அதனைத் தவறான விளக்கம் என்று நினைக்கிறேன். கீழே இருக்கும் நான்கு வரிகளும் பெரியபுராணத்தில் இருப்பவை (பாடல் எண் 3589). ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய ஞான முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாகப் பரம் பொருளாம் ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து இதில் முக்கியமான குறிப்புக்களைப் பார்க்கலாம்: ஆண்டுக்கு ஒன்றாக – ஆமாம், ஒரு ஆண்டுக்கு ஒன்றாக எழுதினார். எதை? பான்மை முறை – அதாவது ஒவ்வொரு பகுதியையும். பால் என்பது பகுதியை/வகைப்படுத்துதலைக் குறிக்கும். பான்மை என்பது பகுப்பு முறை. அதாவது ஒவ்வொரு பகுதியையும் ஒரு ஆண்டு எழுதினார். என்னென்ன பகுதிகள்? இரண்டாவது வரியில் இருக்கிறது விடை. ஞான முதல் நான்கு மலர். அதாவது ஞானம், யோகம், கிரியை, சரியை என்பன அந்த நான்கு மலர்கள். நான்கு பகுதிகள். இந்த நான்கும்தாம் திருமந்திரத்தின் உட்பொருட்கள். இவற்றை விளக்கத்தான் திருமந்திரத்தை எழுதினார். இந்த நான்கு பகுதிகளையும் ஆண்டுக்கு ஒன்றாக எழுதினார். ஆக, திருமூலர் திருமந்திரத்தின் மூவாயிரம் பாடல்களையும் எழுத எடுத்துக்கொண்ட காலம் நான்கு ஆண்டுகள் என்பதே இதன் பொருளாக இருக்கமுடியும். அடுத்த பாடலில் (பாடல் எண் 3590) “மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து” என்று வருகிறதே எனச் சந்தேகம் வரலாம். முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து சென்னி மதி அணிந்தார் தம் திருவருளால் திருக் கயிலை தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார் இரண்டாவது வரியில் வரும் “மூவாயிரத்து” என்பதன் சீர் சரியாக அமைந்திருக்கவில்லை. இந்த ஒற்றைச் சொல் பிற்காலத்தில் மாற்றப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது. முப்பதாண்டு, மூவைந்தாண்டு என்றெல்லாம்கூட இந்த வார்த்தை இருந்திருக்கலாம். அதாவது பாடலை எழுதி முடித்துவிட்டு அங்கு நிலைத்துச் சிலகாலம் இருந்துவிட்டுப் பிறகு திருக்கயிலைக்குச் சென்று அங்கே சிவகதி அடைவதாக வரலாறு கூறுகிறது. எத்தனை ஆண்டுகள் இருந்திருப்பார். பாடல்களை எழுத மூவாயிரம் ஆண்டுகள், எழுதி முடித்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்றால், ஆக மொத்தம் ஆறாயிரம் ஆண்டுகள் ஒரு மனிதர்/தவயோகி வாழ்ந்திருப்பாரா என்பது ஆச்சரியம். எனவே, திருமந்திரத்தின் மூவாயிரம் பாடல்களை எழுத அவர் எடுத்துக்கொண்ட காலம் நான்கு ஆண்டுகள் என்றும், அதற்குப் பிறகு சில காலம் திருவாவடுதுறையில் இருந்தார் என்பதை மட்டும் சொல்லலாம்.

Comments are closed.