பழமொழியும் விளக்கமும்

முருங்கைய ஒடிச்சு வளர்க்கணும்; புள்ளய அடிச்சு வளர்க்கணும்

முருங்கை மரம் அதன் காய், இலை, விதை, பட்டை போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும்.
ஆனால் இதன் மரம் பெரிய மரமாக வளர்க்கப்படுவதில்லை. அப்படியே வளர்ந்தாலும் அதன் மரம் மற்ற மரம் போல பயன்படுவதில்லை.

ஏனென்றால் அது மெல்லிய தன்மை கொண்டது. எளிதில் உடைந்து விடும். இதானலேயே முருங்கை வீட்டின் கூரைக்கு மேல் வளர அனுமதிக்க மாட்டார்கள். தெரியாதவர்கள் அம்மரத்தி்ல் ஏறிவி்ட்டால் ஒடிந்துவிழுந்துவிடும்.

முருங்கை இலையை மருந்துக்காகவும் உணவில் கீரை போலவும் பயன்படும். அது நன்கு வளர அடிக்கடி கிளைகளை நன்கு வளராமல் முறித்து வி்ட்டால் அது மேலும் சீக்கிரம் தளிர்விட்டு காய்க்கும்..

இதே போல தவறு செய்யும் குழந்தைகளை தண்டித்து வளர்த்தால் பிற்காலத்தில் நல்ல மனிதராக வளர்ந்து சமுதாயத்திற்கு பயன்படுவான். அளவிற்கு மீறி செல்லம் கொடுத்து வளர்த்த குழந்தைகள் அதிகமாக பொறுப்பில்லாமல் இருப்பதையை சமூகத்தில் காணமுடிகிறது.

புள்ளை என்பது – பிள்ளை அல்லது குழந்தை எனபதன் பேச்சு வழக்கு.

எறும்புந் தன் கையால் எண் சாண்.

ஒவ்வொரு ஜீவியும் அவரவர் கையால் அளந்து பார்த்தால் எட்டு சாண் அளவு நீளம் / உயரம் இருக்கும். மனித உடலும் அவரவர் கைக்கு எண் சாண் அளவே ஆகும்.

அதே போலவே அளவில் சிறிதாக இருக்கும் எறும்பின் உடலும் அதன் கையால் எட்டு சாண் அளவே ஆகும்.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

சுவரில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு “கன்னமிடுதல்” என்று சொல்வதுண்டு..

மின்னல் வாழை மரத்தில் இறங்கினால், மரம் கருகி கன்னக்கோல் கிடைக்கும், அதைக்கொண்டு எந்த கடினமான சுவற்றையும் துளையிடுவிடலாம் என்பதும் ஒரு கர்ணபரம்பரை கதை..

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.

முருங்கை பருத்தால் தூணாகுமா?

முருங்கை மரம் உறுதித் தன்மையில்லாத மரம். அது எளிதாக முறிந்து விழுந்துவிடும். அது எத்தனை தான் வளர்ந்தாலும் அவை தூணுக்கு ஏற்ற உறுதியைப் பெறாது.

எனவே முருங்கை மரத்தை அடிக்கடி முறித்துவிடுவார்கள், அதனால் நல்ல துளிர் விட்டு வளர்ந்து கீரையைக்கொடுக்கும்.

 

Comments are closed.